அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் குற்றவாளி என கோர்ட்டில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை


அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் குற்றவாளி என கோர்ட்டில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2019 11:45 PM GMT (Updated: 27 Aug 2019 11:14 PM GMT)

அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும், ஒருவர் குற்றவாளி என கோர்ட்டில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான் என்றும் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிரபராதிதான்

கடந்த சில நாட்களாக ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு குறித்து ஊடகங்கள் சரிபார்க்காத மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதை கண்டு நாங்கள் வேதனை அடைகிறோம்.

ப.சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில், ஊடகங்கள் தங்களது உரிமையை நிலைநிறுத்த முடியவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறோம்.

கோர்ட்டில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாதவரை ஒவ்வொரு நபரும் நிரபராதிதான் என்பது உரிமைக்கான அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும்.

உண்மை ஜெயிக்கும்

இந்த விவகாரத்தில் இறுதியில், உண்மை ஜெயிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ப.சிதம்பரம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார். இழிவுபடுத்தும் பிரசாரத்தின் மூலம் அவரது நேர்மை, உழைப்பு, நாட்டுக்கான பங்களிப்பு ஆகியவற்றை அழிக்க முடியாது.

நாங்கள் போதுமான செல்வத்தை கொண்ட குடும்பம். நாங்கள் அனைவரும் வருமான வரி செலுத்துபவர்கள். நாங்கள் பணத்திற்காக ஏங்குவதில்லை. சட்டவிரோதமான வழிகளில் பணம் தேட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவே, பல நாடுகளில் உள்ள சொத்துகள், பல வங்கி கணக்குகள், ஏராளமான ‘ஷெல்’ நிறுவனங்கள் போன்றவற்றின் குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ந்து போய் உள்ளோம்.

சவால் விடுகிறோம்

இவையெல்லாம் பேய் கதைகளின் அத்தியாயங்கள். ஒரு நாள் இந்த பேய்கள் புதைக்கப்படும். உலகின் எந்த பகுதியிலும் வெளியில் தெரியாமல் வங்கி கணக்கோ, சொத்துகளோ அல்லது ‘ஷெல்’ நிறுவனமோ இருப்பதாக மத்திய அரசு சிறிய ஆதாரத்தை கூட வெளியிட முடியாது என்று சவால் விடுகிறோம்.

எனவே, சட்ட விதிகள் மட்டுமே நம்மை பாதுகாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு ஊடகங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து உரிமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story