லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கு தெலுங்கானாவுக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு


லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கு தெலுங்கானாவுக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2019 10:45 PM GMT (Updated: 2019-08-29T00:40:19+05:30)

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றுபவர் முருகன். இவர், பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், இதுகுறித்து விசாரிக்க பெண் டி.ஜி.பி., தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதேநேரம், அந்த ஐ.ஜி. மீது தனியாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஜி. முருகன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, புகார் செய்த பெண் போலீஸ் அதிகாரி, ஐ.ஜி. முருகனை முக்கியத்துவம் இல்லாத வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தனியாக வழக்கு தொடர்ந்தார்.

பாலியல் தொல்லை

அந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஏற்கனவே பிறப்பித்து இருந்து உத்தரவில், “பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே புகாருக்கு உள்ளான ஐ.ஜி., முருகன் மீதான புகார் குறித்து டி.ஜி.பி., ஸ்ரீலஷ்மி பிரசாத் தலைமையிலான உள்ளக விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதுபோல பெண் போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தி சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.

தெலுங்கானாவுக்கு மாற்றம்

இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி., முருகன் மேல்முறையீடு செய்திருந்தார். இதேபோல இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் தனக்கு நியாயம் கிடைக்காது. ஏனெனில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., முருகன் தான் விசாரித்து வருகிறார். எனவே இந்த விசாரணையை கேரளா அல்லது டெல்லிக்கு மாற்ற வேண்டும்‘ என்று புகார் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஜி., முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றுகிறோம். ஏனெனில் இந்த வழக்கில் நேர்மையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6 மாதத்தில் அறிக்கை

எனவே தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்தி வரும் விசாரணை மற்றும் உள்ளக விசாரணைக்குழு நடத்தி வரும் விசாரணை ஆகியவற்றை தனித்தனியாக விசாரிக்க தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்க பெண் உயர் அதிகாரி தலைமையில் சிறப்பு உள்ளக விசாரணைக்குழுவை, தெலுங்கானா மாநில டி.ஜி.பி., அமைக்க வேண்டும்.

அந்த விசாரணை பெண் அதிகாரி, இந்த விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து, விரிவான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும், இந்த வழக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

அதேநேரம் இந்த விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றுவதன் மூலம் தமிழக காவல்துறை மீதும், தமிழக அரசு மீதும் இந்த நீதிமன்றத்துக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்தும் கிடையாது என்பதையும் தெளிவுப்படுத்துகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story