தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது


தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 28 Aug 2019 10:00 PM GMT (Updated: 2019-08-29T00:52:51+05:30)

தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னை, 

தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.29 ஆயிரத்து 704-க்கு தங்கம் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை

இந்த வருட தொடக்கத்தில் அதாவது ஜனவரி 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 168-க்கும் தங்கம் விற்பனையானது. அதனைத்தொடர்ந்து தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.26 ஆயிரத்து 480-க்கு விற்பனை ஆனது.

அதனைத்தொடர்ந்து தங்கம் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒருநாளில் லேசாக குறைவதும், மறுநாளில் கிடுகிடுவென உயர்வதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது.

ரூ.264 உயர்வு

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 680-க்கும், பவுன் ரூ.29 ஆயிரத்து 440-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது. முந்தைய தின விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 713-க்கும், பவுனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.29 ஆயிரத்து 704-க்கும் தங்கம் நேற்று விற்பனையானது.

தங்கத்தை போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 1 ரூபாய் 90 பைசா உயர்ந்து ரூ.51.90-க்கும், கிலோவுக்கு ரூ.1,900 உயர்ந்து ரூ.51 ஆயிரத்து 900-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது

உலக சந்தையில் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும், உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதுமே தங்கத்தின் விலையேற்றத்துக்கான காரணமாக வல்லுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை விரைவிலேயே ரூ.30 ஆயிரத்தை எட்டி புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story