7 பேர் விடுதலை குறித்து 9–ந்தேதிக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


7 பேர் விடுதலை குறித்து 9–ந்தேதிக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2019 7:00 PM GMT (Updated: 2019-08-29T23:25:57+05:30)

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து வருகிற (செப்டம்பர்) 9–ந்தேதிக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

7 தமிழர்கள் விடுதலை பிரச்சினை 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்களில் ஒருவரான நளினி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருக்கிறது. இதன்மூலம் 7 தமிழர்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தற்காலிகமானது தான்.

7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு நிறைவடையப்போகிறது. ஆனாலும், அதன் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதும், இந்த வி‌ஷயத்தில் இனிமேல் தலையிட முடியாது என்று அரசும், கோர்ட்டும் ஒதுங்கி கொள்வதும் நீதியை வென்றெடுப்பதற்காக இன்னும் எத்தனை காலம் தான் போராட வேண்டியிருக்குமோ? என்ற சலிப்பை ஏற்படுத்துகின்றன.

7–ந்தேதிக்குள்... 


இவ்வி‌ஷயத்தில் கவர்னர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது சரியல்ல. ஒருவேளை தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க கவர்னருக்கு விருப்பம் இல்லை என்றால் அதை அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே தீர்மானத்தை தமிழக அமைச்சரவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அதை கவர்னர் ஏற்றுக்கொண்டே தீர வேண்டும். அதன் மூலம் 7 பேர் விடுதலை விரைவாக சாத்தியமாகும்.

எனவே, 7 தமிழர்கள் விடுதலை குறித்த தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடையும் நாளான வருகிற 9–ந்தேதிக்குள் இதுபற்றி கவர்னர் மாளிகை முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் விடுதலையாவதை உறுதி செய்ய தமிழக அரசும் அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story