தாய் கண் எதிரே பரிதாபம் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி


தாய் கண் எதிரே பரிதாபம் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 30 Aug 2019 9:45 PM GMT (Updated: 2019-08-31T00:32:15+05:30)

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிரேயே 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

பூந்தமல்லி, 

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிரேயே 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், டிரைவருக்கும் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

4 வயது சிறுவன்

சென்னை வளசரவாக்கம் அன்புநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் பைசல். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நஸ்ரின். இவர்களுக்கு 4 வயதில் முகமது உவைஸ் என்ற மகன் இருந்தான். அவன், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் நஸ்ரின் தனது மகன் முகமது உவைசை தனது மொபட்டில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வளசரவாக்கம் அன்புநகர், 6-வது தெரு வழியாக சென்றபோது, அந்த வழியாகவந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி, மொபட் மீது மோதியது.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

இதில் தாயும், மகனும் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய முகமது உவைஸ், தலை நசுங்கி தாய் கண் எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். நஸ்ரின் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். அங்கிருந்த பொதுமக்கள், லாரி டிரைவரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் லாரியின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story