மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் சாதனை + "||" + For a one month old baby Liver transplant surgery Madras Doctors Adventure

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் சாதனை

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சென்னை ரேலா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் வெற்றி கரமாக செய்து சாதனை படைத்து உள்ளனர்.
சென்னை,

மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஓரிரு நாட்களில் குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தது. மும்பையில் உள்ள மருத்துவர்களிடம் பெற்றோர் குழந்தையை காண்பித்தனர். சாதாரண தொற்றுநோய் அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்தனர்.


ஆனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. தீவிர பரிசோதனைக்கு பிறகு குழந்தைக்கு ஒருவித வளர்சிதை மாற்ற நோய் இருப்பதை கண்டறிந்தனர். எனவே இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வு என்று தெரிந்தது. உடனடியாக பெற்றோர் ஒரு மாத குழந்தையுடன், மும்பையில் இருந்து சென்னை வந்து, ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடங்கி உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டருக்கு வந்தனர். அங்கு மருத்துவமனை தலைவரும், மேலாண்மை இயக்குனருமான பேராசிரியர் டாக்டர் முகமது ரேலாவை சந்தித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வசதிகள் துணையுடன் அனுபவம் வாய்ந்த குழந்தை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி 10 மணிநேரம் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இதுகுறித்து டாக்டர் முகமது ரேலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துல்லியமான காரணத்தை கண்டறிந்து, துரிதமாக தேவையான மருத்துவ சிகிச்சைகளை செய்ததன் மூலம் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்தியாவில் எங்கும் ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றி கரமாக செய்தது இல்லை. இதுவே முதல்முறையாகும்.

குழந்தையின் பெற்றோரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த சிகிச்சை மூலம் அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழுவும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இருந்தால் எந்த வயதினருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் நரேஷ் சண்முகம் கூறியதாவது:-

குழந்தைக்கு யூரியா சுழற்சி கோளாறு ஏற்பட்டது. நம் உடல் புரதச்சத்தை வளர்சிதை செய்யும்போது, அமோனியா உருவாகிறது. ஆரோக்கியமான கல்லீரல், அமோனியாவை யூரியாவாக மாற்றுகிறது. பின்பு யூரியா சிறுநீர் மூலமாக வெளியேறும். ஆனால் இந்த குழந்தையின் கல்லீரலால் அமோனியாவை யூரியாவாக மாற்ற முடியவில்லை. இதனால் ரத்தத்தில் அமோனியாவின் அளவு அதிகரித்தது. இதனால் மூளை பாதிப்பதுடன், கோமா நிலையையும், உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

டயாலிசிஸ் முறையில் ரத்தத்தை சுத்தம் செய்வது தற்காலிக தீர்வு தான். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர வேறு வழி இல்லை என்பதால், குழந்தையின் தாய்மாமா ஆஷிஸ் ஷா என்பவர் அளித்த ஒரு பகுதி கல்லீரலை பெற்று, அது அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவமனை கண்காணிப்பில் குழந்தை நலமாக உள்ளது. பிறக்கும் 3 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பிரச்சினை ஏற்படும். ஆனால் அனைத்து வளர்சிதை கோளாறுகளும் ஆபத்தானவை இல்லை. ஒரு துளி ரத்தத்தை எடுத்து பரிசோதித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மருத்துவமனை ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, மருத்துவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.