கொத்தடிமைகளாக இருந்த 15 பேர் மீட்பு: மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு


கொத்தடிமைகளாக இருந்த 15 பேர் மீட்பு: மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 10 Sep 2019 9:30 PM GMT (Updated: 10 Sep 2019 9:04 PM GMT)

தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகளாக இருந்த 15 பேர்களை மீட்கப்பட்டு, ஒருமுனைத் திட்டத்தின் கீழ் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகளாக இருந்த 15 பேர்களை, விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்களும், சர்வதேச நீதி இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குநர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்கள் சுயமாக தொழில் செய்ய வழிவகை செய்து வருகின்றனர்.

அவ்வாறு கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மீண்டு, சுயமாக தொழில் நடத்தி வருபவர்கள், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினரான டாக்டர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி. தலைமையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து, தங்கள் சுயதொழிலில் செய்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றனர். கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தும் ஒருமுனைத் திட்டத்தின் கீழ் வழங்கிட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அப்போது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story