மாநில செய்திகள்

அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு + "||" + After 8 years in Anna Salai Two-way traffic

அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு

அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு
மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் நேற்று போக்குவரத்து சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.
சென்னை, 

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் நேற்று போக்குவரத்து சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

மெட்ரோ ரெயில் பணி

சென்னையில் வண்ணாரப்பேட்டையையும், விமான நிலையத்தையும் இணைக்கும் மெட்ரோ ரெயில் பணியையொட்டி எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏ.ஜி.டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மெட்ரோ ரெயில் பணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு இருவழிப்பாதை போக்குவரத்தாக இருந்த சென்னை அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அண்ணாசாலையில் எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லும் பகுதி மூடப்பட்டது. ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மீண்டும் இருவழிப்பாதை

இதனால் வாகன ஓட்டிகள் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தது. அதாவது 2 கி.மீ. தூரம் கூடுதலாக கடக்க வேண்டியது இருந்தது. குறிப்பாக ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் (ஜெமினி) இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்மார்க்கம் மட்டுமே ஒருவழிப்பாதையாக இயங்கி வந்தது.

இந்தநிலையில் அண்ணாசாலையில் நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்ததை தொடர்ந்து, அண்ணாசாலையில் மீண்டும் பழையபடி அதாவது இருவழிப்பாதை போக்குவரத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2 நாட்கள் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறையை மேற்கொள்ள போக்குவரத்து போலீஸ் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

பூசணிக்காய் உடைத்து பூஜை

இந்த சோதனை நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலை நேற்று மீண்டும் இருவழிப்பாதை போக்குவரத்தானது. இந்த போக்குவரத்தை சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் தொடங்கி வைத்தார். பாதை திறக்கப்பட்ட அண்ணாசாலையில் பூசணிக்காய் உடைத்து பூஜையும் செய்யப்பட்டது.

அதன்படி அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்பட்டது.

ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து...

ஸ்மித் ரோடு ஒருவழிப்பாதையாக முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வாகனங்கள் அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் செல்லவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பட்டுல்லாஸ் சாலை வழியாக...

பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லவேண்டிய வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்ட்ரான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேவேளை அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் கூறுகையில், “அண்ணாசாலையில் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) இருவழி போக்குவரத்து சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும். அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நிறைகள்-குறைகள் கேட்டறிந்து, இதனை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளை கையாள்வோம்”, என்றார்.

அண்ணாசாலையில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட இந்த நடைமுறை குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஆங்காங்கே நின்றுகொண்டு அறிவிப்பு செய்ததை பார்க்க முடிந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் இருவழிப்பாதை போக்குவரத்து திரும்பியதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர். ‘இனி அண்ணாசாலையில் இருந்து அண்ணா மேம்பாலத்துக்கு விரைவில் சென்றுவிடலாம்’, என்று மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

256 மாநகர பஸ்கள்

அண்ணாசாலை மீண்டும் இருவழிப்பாதை போக்குவரத்தாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இருவழியாக செல்லும் வகையில் மாநகர பஸ்களும் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

பிராட்வேயில் இருந்து ஊனமாஞ்சேரி, தியாகராயநகர், கே.கே.நகர், அய்யப்பன்தாங்கல், பழந்தண்டலம், சைதாப்பேட்டை, குன்றத்தூர், கீழ்கட்டளை, ராமாபுரம், சைதாப்பேட்டை மேற்கு, நங்கநல்லூர், பெரும்பாக்கம், சி.எம்.பி.டி., மாங்காடு, சாலிகிராமம், முகலிவாக்கம், தாம்பரம் கிழக்கு, பட்டினப்பாக்கம், மாம்பாக்கம் கூட் ரோடு, புழுதிவாக்கம், பொழிச்சலூர், அஸ்தினாபுரம், மூவரசம்பேட்டை, பூந்தமல்லி, குத்தம்பாக்கம், நேமம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல் காமராஜபுரம், சங்கரா ஆஸ்பத்திரி, நந்தம்பாக்கம், தண்டலம், சோமங்களம், ஏ.ஜி.எஸ். ஆபிசர்ஸ் காலனி, சித்தாலப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், அமரம்பேடு ஆகிய பகுதிகளுக்கும்,

சென்டிரலில் இருந்து திருப்போரூருக்கும், அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகர், திருவான்மியூருக்கும், திருவான்மியூரில் இருந்து கொரட்டூருக்கும், வில்லிவாக்கத்தில் இருந்து வேளச்சேரி, பட்டினப்பாக்கத்துக்கும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் என 256 மாநகர பஸ்கள் (2,963 நடைகள்) இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.