கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:00 PM GMT (Updated: 12 Sep 2019 7:16 PM GMT)

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கோவையை சேர்ந்தவர் அப்துல் மன்னன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

உடல்நலம் பாதிப்பு

என் தந்தை பிலால் ஹாஜியார் என்ற அப்துல ஹமீது 1990-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவருக்கு 86 வயது. உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்க வசதி இல்லாததால், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் கருதி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு மனு கொடுத்தேன்.

இதையடுத்து மருத்துவ காரணங்களின் அடிப்படையில், என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் குழு பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டரும், சிறை நன்னடத்தை அதிகாரியும் என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

ஆனால், என் தந்தை மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்றும், அவரை வெளியே விட்டால், மத கலவரம் ஏற்படும் என்றும் காரணம் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்று சிறைத்துறை ஐ.ஜி., பரிந்துரைத்தார்.

இதை ஏற்றுக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர், என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கடந்த ஜூன் 13-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அரசு வக்கீல் எதிர்ப்பு

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் தந்தையை விடுவிக்கக்கூடாது என்று அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.பொன்ராஜ், ‘மனுதாரரின் தந்தைக்கு 86 வயது ஆகிறது. சிறை விதிகளின்படி, தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. முடிவு எடுக்க அதிகாரம் கிடையாது’ என்று வாதிட்டார்.

முன்கூட்டியே விடுதலை

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘மனுதாரரின் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மருத்துவக்குழுவும், கலெக்டரும், நன்னடத்தை அதிகாரியும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் மனுதாரரின் தந்தைக்கு 86 வயதாகி, உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். மனுதாரரின் தந்தையை 4 வாரத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story