மாநில செய்திகள்

ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை சென்னையில் நடந்தது + "||" + Violence Against the Aborigines

ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை சென்னையில் நடந்தது

ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை சென்னையில் நடந்தது
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று சென்னையில் பொது விசாரணை நடத்தியது.
சென்னை, 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை, மனித உரிமை மீறல் புகார்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சென்னையில் 2 நாட்கள் பொது விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நேற்று இந்த பொது விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தொடங்கி வைத்து பேசினார்.

விரைந்து நடவடிக்கை

அப்போது அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை, மனித உரிமை மீறல் புகார்கள் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் ஜெய்தீப் கோவிந்த், தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட மொத்த புகார் மனுக்கள், அவற்றில் முடிக்கப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பரிந்துரைத்த இழப்பீடு தொகை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு பேசினார்.

இன்றும் விசாரணை

இதில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர், 179 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எச்.எல்.தத்து, உறுப்பினர்கள் பி.சி.பான்ட், ஜோதிகா கல்ரா, தியானேஸ்வர் முலாய் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இதுதவிர பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களும் பெறப்பட்டன. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணை நடக்கிறது.