கம்போடியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல்


கம்போடியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 9:22 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடல் கட்டமைப்புக்கான மருந்து, மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த ராஜன் மிஸ்ரா(வயது 46) என்பவர் 8 சூட்கேஸ்களுடன் வந்தார்.

ஒரே நபர் வழக்கத்துக்கு மாறாக அதிகமான உடைமைகளை கொண்டு வருவதை கண்டு சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

மருந்து, மாத்திரைகள்

அதில் ஊசி மருந்துகள், மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இந்த ஊசி மருந்து, மாத்திரைகள் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த மருந்து, மாத்திரைகள் ஆணழகனாக காட்ட உதவியாக இருக்கும் என்பதால் உடல் கட்டமைப்புக்கான உடற்பயிற்சி கூடங்களில் இந்த ஊசி மருந்து, மாத்திரைகளை இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்துவது தெரியவந்தது.

இது பற்றி சுங்க இலாகா அதிகாரிகளிடம் ராஜன் மிஸ்ரா கூறியதாவது:-

உடற்பயிற்சி கூடங்களுக்கு

கொல்கத்தாவில் இருந்து கம்போடியா நாட்டுக்கு சென்றேன். அங்கு உடல் கட்டமைப்புகளை வசீகரமாக மாற்றக்கூடிய ஊசி மருந்து, மாத்திரைகளை வாங்கி வந்து கொல்கத்தாவில் உள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பனை செய்வேன்.

இந்த ஊசி மருந்து, மாத்திரைகள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடிக்கடி கம்போடியாவுக்கு சென்று வாங்கி லக்னோ வழியாக வருவேன். முதன்முறையாக இப்போது சென்னைக்கு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்து, மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜன் மிஸ்ராவிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story