கோவையில் மருந்துகடையில் வாலிபர் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி


கோவையில் மருந்துகடையில் வாலிபர் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி
x
தினத்தந்தி 18 Sep 2019 9:37 AM GMT (Updated: 18 Sep 2019 9:37 AM GMT)

கோவையில் இன்று காலை பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 24). கார்சீட் கவர் கடை நடத்தி வருகிறார் . இவருக்கு இன்று காலை பல் வலி ஏற்பட்டது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்று பல் வலிக்கு மாத்திரைகள் வாங்கினார். 6 ஆப்லோராக்ஸ் (oflorox) மாத்திரைகள் அடங்கிய கவரை அளித்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு சென்ற முஸ்தபா மாத்திரையை பிரித்து சாப்பிட முயன்றார். அப்போது மாத்திரையின் நடுவில் இரும்பு கம்பி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மருந்து கடைக்காரரிடம் சென்று நீங்கள் கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி இருப்பதாக கூறினார். அவர் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிக்கு இது குறித்து புகார் தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதனையடுத்து முஸ்தபாவின் உறவினர், நண்பர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மருந்து கடைக்குச் சென்று சம்பவம் குறித்து கேட்டனர். இதற்கு அவர்கள், ஏற்கெனவே அளித்த பதிலையே மீண்டும் கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் முஸ்தபாவும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மருந்துக் கடை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உக்கடம் போலீஸார், முஸ்தபாவிடமும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனியிடமோ, சுகாதாரத் துறையிடமோதான் முறையிட கூறினர்.  இதையடுத்து முஸ்தபா தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story