மாநில செய்திகள்

நீட்தேர்வு ஆள்மாறாட்டம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை + "||" + NEET Exam impersonation Theni police investigate at Stanley Government Hospital in Chennai

நீட்தேர்வு ஆள்மாறாட்டம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை

நீட்தேர்வு ஆள்மாறாட்டம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை
நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவர் உதித்சூர்யா மீது மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உதித்சூர்யாவை பிடித்து விசாரணை நடத்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தனிப்படையினர் மாணவரை பிடித்து விசாரிப்பதற்காக சென்னை விரைந்தனர். ஆனால் சென்னையில் மாணவர் தங்கியிருந்த வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனால், அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

மாணவரின் தந்தை வெங்கடேசன் டாக்டராக உள்ளார். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியே தெரியவந்ததால் மாணவர் தனது பெற்றோருடன் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மாணவர், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் மும்பையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்யவும் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்ல உள்ளனர்.

மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மாணவர் உதித்சூர்யாவின், தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீப் மெடிக்கல் ஆபீசர் ஆக பணிபுரிந்து வருவதால் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.