சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்
x
தினத்தந்தி 22 Sep 2019 12:00 AM GMT (Updated: 21 Sep 2019 11:01 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில்ரமானியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் வி.கே.தஹில்ரமானி. இவரை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மூத்த நீதிபதிகள் குழுவுக்கு, தஹில்ரமானி அனுப்பிய கோரிக்கை கடிதமும் நிராகரிக்கப்பட்டது.

இதனால், அவர் தன் பதவியை கடந்த 6-ந்தேதி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

பின்னர் கடந்த 9-ந்தேதி முதல் அவர் ஐகோர்ட்டுக்கும் வரவில்லை. அவர் விசாரிக்க வேண்டிய வழக்குகளை எல்லாம், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

ராஜினாமா ஏற்பு

இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். அவர், தஹில்ரமானியின் ராஜினாமா கடிதத்தை பரிசீலித்து ஏற்றுக்கொண்டார். இதற் கான உத்தரவை அவர் நேற்றுமுன்தினம் பிறப்பித்தார்.

அதேநேரம், சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மற்றொரு உத்தரவையும் பிறப்பித்தார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர்

பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், சட்டப்படிப்பை முடித்து 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்டு பணியாற்றினார். வரி தொடர்பான வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டு கர்நாடக மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து மாற்றப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக பதவி ஏற்றார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story