பருவ மழைக்காலத்தில் பள்ளிகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


பருவ மழைக்காலத்தில் பள்ளிகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2019 8:30 PM GMT (Updated: 2019-09-25T01:57:18+05:30)

பருவ மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சென்னை,

அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஒரு அவசர சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

அதில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* மழையால் ஏதாவது வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த வகுப்பறைகளை பூட்டிவைக்க வேண்டும். அங்கு யாரும் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்க தொட்டிகள் இருந்தால் அவை மூடப்பட்டிருக்க வேண்டும்.

* மின் சுவிட்சுகள் சரியாக உள்ளதா? என்றும், மழைநீர் படாதவாறு இருக்கின்றதா? என்றும் தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக இருக்கின்றதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* விழுகிற நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் உடனடியாக அகற்றவேண்டும்.

* பள்ளிகளில் உள்ள மின்கம்பிகள் மின் கசிவின்றி பாதுகாப்பாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* தொடர் மழையால் பள்ளி சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும், காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும்.

* மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளை பிளச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்துவைக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் மருத்துவ ஆய்வாளரின் ஆலோசனைப்படி குளோரின் (அளவோடு) கலந்து பயன் படுத்த வேண்டும்.

* மழைக்காலத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து வகுப்பறையிலேயே ஆசிரியர்களால் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

பருவமழை காலங்களில் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி அனைத்து தலைமை ஆசிரியர் களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர் கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story