ரெயில்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்; மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ரெயில்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்; மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:10 PM GMT (Updated: 25 Sep 2019 11:10 PM GMT)

ஏழைகளுக்கு ரெயில் பயணம் எட்டாக்கனியாகி விடும். எனவே ரெயில்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அதிகம் பேர் பயணிக்கும் ரெயில் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையற்ற தனியார் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த முடிவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய ரெயில்வே வாரியம் கடந்த 23-ந்தேதி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தான் ரெயில்களை தனியார் மயமாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் 27-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கட்டணம் குறைவு என்பதால், அவை ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.

தனியார் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்பு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு ரெயில் பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும்.

மாதாந்திர பயணச்சீட்டு முறையும் ஒழிக்கப்படும் என்பதால் புறநகர் ரெயில்களில் பயணிப்பவர்கள் மாதம் ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஜூலை 12-ந்தேதி அன்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய மந்திரி பியூஷ் கோயல், ரெயில்வே துறை ஒரு போதும் தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.

அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரெயில் வண்டிகளை தனியார்மயமாக்க துடிப்பது நியாயம் அல்ல. எனவே ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story