விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி சுவரொட்டி, பேனர்களுக்கான விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி சுவரொட்டி, பேனர்களுக்கான விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:46 PM GMT (Updated: 25 Sep 2019 11:46 PM GMT)

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி பொது இடங்களில் சுவரொட்டிகள், பேனர்கள் வைப்பதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

அந்த தொகுதிகளுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறேன்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரங்கள் செய்யப்பட்டால் அதை அப்புறப்படுத்தி வருகிறோம். இதுவரை 215 போஸ்டர்கள் (சுவரொட்டிகள்) அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக எந்த பொருளும், பணமும் பிடிபடவில்லை.

பேனர், போஸ்டர் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அதற்கென்று விதிகள், சட்டங்கள், கோர்ட்டு உத்தரவுகள் உள்ளன. அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்துவார்கள்.

ஆனால் பேனர், போஸ்டர் தொடர்பாக இப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்றெல்லாம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு குறிப்பிட்டு ஏதாவது ஆணையை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளதா என்பது தெரியவில்லை.

ஆனால் பொது இடங்களில் போஸ்டர் ஓட்டுவது போன்ற விவகாரங்களில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கைகளை அளித்து வருகிறோம்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகுதான் பொது பார்வையாளர்கள் வருவார்கள். கடந்த 23-ந்தேதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களாக யார் வருகிறார்கள் என்பது பின்னர்தான் தெரியும்.

விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் 9 பறக்கும் படைகள் (3 ஷிப்டு), 9 கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ படப்பிடிப்புக் குழுக்கள், ஒரு வீடியோ பார்வையாளர் குழு அமைக்கப்பட்டு பணியில் உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதி தவிர விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் 30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ படப்பிடிப்புக் குழுக்கள், ஒரு வீடியோ பார்வையாளர் குழு ஆகியவை பணியில் உள்ளன.

நாங்குநேரி தொகுதியில் மட்டும் 9 பறக்கும் படைகள் (3 ஷிப்டு), 9 கண்காணிப்புக் குழுக்கள், தலா ஒரு வீடியோ படப்பிடிப்புக்குழு, வீடியோ பார்வையாளர் குழு ஆகியவை பணியில் உள்ளன.

நாங்குநேரி தொகுதி தவிர திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் 27 பறக்கும் படைகள், 27 கண்காணிப்புக் குழுக்கள், தலா ஒரு வீடியோ படப்பிடிப்புக் குழு, வீடியோ பார்வையாளர் குழு ஆகியவை பணியில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story