ஓடும் ரெயிலில் ஜன்னல் வழியாக வெளியே விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜன்னல் வழியாக வெளியே விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
நெல்லை,
பாளையங்கோட்டை சமாதானபுரம் பழைய மிலிட்டரி லைன் பேரின்ப தெருவை சேர்ந்தவர் பேட்ரிசன். இவருடைய மகள் ஸ்மைலின் (வயது 6). நேற்று முன்தினம் இரவு பேட்ரிசனின் மனைவி சுதா, குழந்தை ஸ்மைலின் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துகொண்டிருந்தனர்.
ரெயில் வள்ளியூரை கடந்து செங்குளம் பகுதியில் வந்தபோது சிறுமி ஸ்மைலின் அவசர வழி ஜன்னல்(இதில் தடுப்பு கம்பிகள் இருக்காது) அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்து விழுந்தாள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ரெயில் பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து பிடித்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் சிறுமி விழுந்த பகுதிக்கு வேகமாக ஓடிச்சென்றனர். அப்போது ஸ்மைலின் கையில் காயங்களுடன் அழுது கொண்டிருந்தாள். வள்ளியூரில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக இயக்கப்பட்டதால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
பின்னர் பெற்றோர் அவளை வாரி அணைத்து அதே ரெயிலில் நெல்லை சந்திப்புக்கு வந்து சேர்ந்தனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் ஸ்மைலின் கையில் இருந்த காயத்துக்கு கட்டுபோட்டு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்மைலின் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story