பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவு சென்னையில் தூதரகம் சார்பில் ஜெர்மனி ஒற்றுமை தினவிழா


பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவு சென்னையில் தூதரகம் சார்பில் ஜெர்மனி ஒற்றுமை தினவிழா
x
தினத்தந்தி 10 Oct 2019 9:15 PM GMT (Updated: 10 Oct 2019 9:15 PM GMT)

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஜெர்மன் தூதரகம் சார்பில் அந்நாட்டின் ஒற்றுமை தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை,

1961-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் மக்கள் வெளியேறுவதை தடுக்க அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோவியத் அரசு பெர்லினில் 155 கிலோ மீட்டர் நீளத்துக்கு 12 அடி உயரத்தில் சுவர் எழுப்பியது.

சோவியத் நாடு சிதறியபோது கிழக்கு ஜெர்மனி மக்கள் கிளர்த்தெழுந்து பெர்லின் சுவரை தகர்த்தெறிய தொடங்கினர். 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி பெர்லின் சுவர் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் கிழக்கு, மேற்கு ஜெர்மனி 1990-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் ஒரே நாடானது.

சென்னையில் விழா

பெர்லின் சுவர் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் 29-வது ஆண்டு ஒற்றுமை தினம் சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் சார்பில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டு தூதர் கரின் ஸ்டோல் தலைமை தாங்கினார்.

ஜெர்மனி துணைத்தூதர் மைக்கேல் வேக்னர், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ‘தந்தி டி.வி.’ இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கரின் ஸ்டோல் பேசியதாவது:-

அமைதியும், வளமும்

ஜெர்மன் நாடு மீண்டும் ஒன்றிணைய வலிமையான அதேவேளையில் அமைதியான போராட்டமே காரணமாக அமைந்தது. அந்த வெற்றியை, மகிழ்ச்சியை நாம் இன்று கொண்டாடி மகிழ்கிறோம். ஜெர்மனியின் கூட்டாட்சி குடியரசு, ஐரோப்பாவில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு தற்போது ஜெர்மனியில் நிலவும் அமைதி மற்றும் வளத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜனநாயகம் மற்றும் சுதந்திரபோக்கு ஆகியவை ஜெர்மனியின் வெளியுறவு கொள்கைக்கு வித்திடுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பு நாடாக ஜெர்மனி அங்கம்வகிக்க இருக்கிறது.

மின்சார பஸ்கள்

இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறோம். உலகளவில் பல விஷயங்களில் இந்தியாவும், ஜெர்மனியும் பொதுவான சிந்தனையை கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம். இந்தியாவும், ஜெர்மனியும் ஒன்றிணைந்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தை பெற முயற்சி மேற்கொள்வோம்.

இந்தியா-ஜெர்மனி இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் பல்வேறு தொழில் கட்டமைப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. சமீபத்தில் சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும் புதிய திட்டத்துக்கு தமிழக அரசுடன், ஜெர்மனி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் தமிழக அரசுடன் இணைந்து சென்னையில் நீர் ஆதார திட்டங்களையும் மேற்கொள்ள இருக்கிறோம்.

இந்தியாவுடன் உறவு தொடரும்

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஜெர்மனிக்கு கல்வி கற்க வருகிறார்கள். இந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது 17 ஆயிரத்து 500 மாணவர்கள் ஜெர்மனியில் படிக்க விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் தென்னிந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிகம்.

இந்திய-ஜெர்மனி பிரதிநிதிகள் பல கலைநயமிக்க இடங்களில் குறிப்பாக திராவிட பெருமை நிறைந்த கோவில்களில் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த உறவு என்றென்றும் தொடரும். இருநாட்டு ஒற்றுமை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story