மாநில செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் 3-வது நாளாக பிரசாரம்:தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லைஅ.தி.மு.க. அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + AIADMK On the government MK Stalin Accusation

நாங்குநேரி தொகுதியில் 3-வது நாளாக பிரசாரம்:தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லைஅ.தி.மு.க. அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாங்குநேரி தொகுதியில் 3-வது நாளாக பிரசாரம்:தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லைஅ.தி.மு.க. அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ என்று அ.தி.மு.க. மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து, கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக நேற்று காலை தனது பிரசாரத்தை நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் இருந்து தொடங்கினார். அங்கு கிராம மக்களிடம் திண்ணை பிரசாரம் செய்தார்.

அவரை கிராம மக்கள் குலவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டு இருந்த பெஞ்ச் மீது மு.க.ஸ்டாலின் அமர்ந்தார். அவரிடம், அந்த பகுதி பெண்கள் வரிசையில் நின்று குறைகளை தெரிவித்தனர். முதியோர் உதவித்தொகை கிடைப்பது இல்லை. குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை என்று புகார் தெரிவித்தனர்.

இந்த பிரசாரத்தை முடித்து விட்டு தருவை, செங்குளம் கிராமங்களுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

ஆதரவு

பிரசாரத்தின்போது மு.க.ஸ்டா லின் பேசியதாவது:-

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்க வந்து இருக்கிறேன்.

எங்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு கடந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளித்தீர்கள். அதேபோல் நடைபெற உள்ள நாங்குநேரி இடைத்தேர்தலிலும் ஆதரவு அளிக்க வேண்டும்.

என்னிடம் கிராம மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது தான்.

உள்ளாட்சி தேர்தல்

உங்கள் பகுதியில் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள் இருந்தால் அவர்களிடம் முறையிட்டு இருப்பீர்கள். அவர்கள் இந்த பிரச்சினையை தீர்த்து இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. வழக்கு போட்டு உள்ளது என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் வழக்குப்போட்டோம். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றி பெறும். தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது.

பல்வேறு திட்டங்கள்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது விவசாயிகள், பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது. கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஆசிரியர் வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு, பெண்களுக்கு திருமண உதவித்தொகை, விதவைகள் மறுவாழ்வு திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது பல மாவட்டங்களில் நேரில் சென்று பெண்களுக்கு சூழல் நிதி வழங்கியுள்ளேன்.

மக்களுக்கு எதிரான திட்டங்கள்

தற்போது உள்ள அ.தி.மு.க. ஆட்சியை பற்றி உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சி மத்திய அரசின் அடிமை ஆட்சியாக செயல்படுகிறது. அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வந்துள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மீதும் ஊழல் புகார்கள் இருக்கிறது. இதை வைத்து மத்திய அரசு, அ.தி.மு.க. அரசை மிரட்டி வருகிறது.

மக்களுக்கு எதிரான திட்டங்கள் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. இதை ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரன் 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றியவர். நாட்டை காப்பாற்றியவர், தொகுதி மக்களை காப்பாற்ற மாட்டாரா? அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இளநீர் குடித்தார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னீர்பள்ளம் அண்ணாசிலை பகுதியில் நடந்தே சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று ஓட்டு கேட்டார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் மு.க.ஸ்டாலின் டீ குடித்தார். பின்னர் அந்த வழியாக வந்த பஸ்சில் சென்ற பயணிகளிடம் ஓட்டு கேட்டார்.

தொடர்ந்து தருவையில் சாலையோரத்தில் ஒரு மூதாட்டி இளநீர் விற்பனை செய்து கொண்டு இருந்தார். அந்த கடைக்கு சென்று மு.க.ஸ்டாலின் இளநீர் குடித்தார். மேலும் தருவையில் நடந்த திண்ணை பிரசாரத்தின் போது, பெண்கள், இளைஞர்கள் மு.க.ஸ்டாலினுடம் செல்பி எடுத்துக்கொண்டனர்.