குண்டு துளைக்காத அரங்கில் மோடியை சந்தித்து பேசுகிறார் சீன அதிபர் ஜின்பிங் இன்று வருகை பாதுகாப்பு வளையத்தில் சென்னை


குண்டு துளைக்காத அரங்கில் மோடியை சந்தித்து பேசுகிறார் சீன அதிபர் ஜின்பிங் இன்று வருகை பாதுகாப்பு வளையத்தில் சென்னை
x
தினத்தந்தி 11 Oct 2019 12:15 AM GMT (Updated: 10 Oct 2019 10:44 PM GMT)

சீன அதிபர் ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சென்னை,

உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன.

மாமல்லபுரத்தில் சந்திப்பு

அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப் படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

இப்போது அவர்கள் மீண்டும் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த சந்திப்பு சென்னையை அடுத்துள்ள சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

மோடி-ஜின்பிங் இன்று வருகை

இதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்கள்.

தனி விமானம் மூலம் இன்று பகல் 12.30 மணி அளவில் சென்னை வரும் மோடி, விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

சீன அதிபர் ஜின்பிங் தனி விமானம் மூலம் பகல் 1.30 மணிக்கு சென்னை வந்து சேருகிறார். அவருடன் 200 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள். மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்தில் வந்து இறங்கும் அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கும் ஜின்பிங், மாலை 4 மணிக்கு அங்கிருந்து காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் செல்கிறார்.

குண்டு துளைக்காத அரங்கங்கள்

அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்துவிட்டு, பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசிக்கிறார்கள்.



கடற்கரை கோவில் அருகே மாலை 6 மணி அளவில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களிப்பார்கள். தலைவர்களுடன் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாலை 6.45 மணிக்கு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் ஜின்பிங் காரில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு திரும்புகிறார்.

பேச்சுவார்த்தை

நாளை காலை அவர் அங்கிருந்து காரில் கிளம்பி கோவளத்தில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு 9.50 மணிக்கு செல்கிறார். அங்கு இரு தலைவர்களும் முதலில் தனியாக பேசுகிறார்கள். பின்னர் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினரும் கலந்து கொள்வார்கள். அதன்பிறகு மோடியுடன் சேர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு, ஜின்பிங் காரில் சென்னை விமானநிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.45 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பாதுகாப்பு வளையத்தில் சென்னை

சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை நகரமும், மாமல்லபுரமும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளன. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிண்டியில் ஜின்பிங் தங்க இருக்கும் நட்சத்திர ஓட்டல் வரையிலும், இதேபோல் அந்த ஓட்டலில் இருந்து அவர் மாமல்லபுரம் செல்லும் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு படையினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.



இரு தலைவர்களின் வருகையால் சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம் வருபவர்கள், தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வாழை மர தோரணம்

விமான நிலையத்தில் சீன பாதுகாப்பு படை மற்றும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினருடன் சென்னை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பழைய விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்க செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

சீன அதிபரை வரவேற்கும் விதமாக பழைய விமான நிலையத்தின் 5-வது நுழைவு வாயில் அருகே வாழை மரம் மற்றும் கரும்பால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் புதிதாக பசுமை புல்வெளியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஓட்டல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பள்ளி மாணவர்கள் நின்று சீன அதிபரை வரவேற்பார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டல் வரையிலும், இதேபோல் அந்த ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் 34 இடங்களில் ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளாக 10 பேரையும், ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 34 பேரையும் தமிழக அரசு நியமித்து உள்ளது.

விழாக்கோலம் பூண்ட மாமல்லபுரம்

இரு பெரும் தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றன.

மோடி-ஜின்பிங்கை வரவேற்று மாமல்லபுரத்தில் பனை ஓலையால் பின்னப்பட்ட பிரமாண்டமான அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

ஜின்பிங்கை வரவேற்று தமிழ், இந்தி, சீன மொழி வாசகங்களுடன் கூடிய பேனர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன.

சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரம் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்லவேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சவுக்கு தோப்புகள் கண்காணிப்பு

நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் உள்ள பண்ணை வீடுகள், சவுக்கு தோப்புகள் போன்ற இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என இரவு- பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

சீன அதிபர் பயணிக்க இருக்கும் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அந்த சாலையில் போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் என்பதால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு தங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டு உள்ளன. மேலும் அந்த சாலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு ஒத்திகை

விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டல் வரை சீன அதிபர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஜின்பிங் மற்றும் அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் பயணம் செய்வதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிநவீன கார்களும் பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு ஒத்திகையின் காரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பல்லாவரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சீன அதிபர் சாலை மார்க்கமாக பயணம் செய்யும் போது, அவர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

Next Story