சீன அதிபர் வருகையை எதிர்த்து ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 6 திபெத்தியர்கள் கைது விமான நிலையத்திலும் 6 பேர் பிடிபட்டனர்


சீன அதிபர் வருகையை எதிர்த்து ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 6 திபெத்தியர்கள் கைது விமான நிலையத்திலும் 6 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:40 PM GMT (Updated: 11 Oct 2019 11:40 PM GMT)

சீன அதிபர் வருகையை கண்டித்து, அவர் தங்கும் ஓட்டல் முன்பு போராட்டம் நடத்திய 6 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்ட நோக்கத்துடன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஜின்பிங் நேற்று சென்னை வந்தார். அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜின்பிங் வருவதற்கு முன்பாக நேற்று பகல் 11.15 மணியளவில் திபெத் நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஓட்டலுக்குள் செல்வது போல் மெதுவாக நடந்து வந்தார்.

அவரது நடவடிக்கையில் எந்த வித்தியாசமும் தெரியாததால் போலீசார் அவரை கண்டுகொள்ளவில்லை. திடீரென்று அந்த வாலிபர் சாலையின் மைய பகுதியை நோக்கி ஓடினார். அங்கு அவர் சாலையில் அமர்ந்து கொண்டு, சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த திபெத் நாட்டு கொடியை கையில் ஏந்தி, ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்று சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைது-பரபரப்பு

அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவருடன் வந்திருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் திடீரென்று சாலை ஓரத்தில் நின்றபடி கோஷமிட்டனர். இருபக்கத்திலும் போராட்ட கோஷம் ஒலித்ததால் போலீசார் விரைவாக செயல்பட்டு 6 பேரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர்.

சீன அதிபர் ஓட்டலுக்கு வருவதற்கு முன்பே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு விட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இதற்கிடையே பெங்களூரூவில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையம் வந்த 4 பெண்கள் உள்பட 6 திபெத்தியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களும் போராட்டம் நடத்தும் நோக்கத்தில் சென்னை வந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர் சோதனை, விசாரணை என்று சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பெரும் பரபரப்பாக இருந்தது.

Next Story