டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் இருக்க வேண்டும் மேலாண்மை இயக்குனர் உத்தரவு


டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் இருக்க வேண்டும் மேலாண்மை இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Oct 2019 8:30 PM GMT (Updated: 12 Oct 2019 7:34 PM GMT)

டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் இருக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

மதுபான கடைகள் மற்றும் பார்களில் தலைமை அலுவலக ஆய்வு குழுவினர், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக ஆய்வு குழுவினர், மண்டல அளவிலான பறக்கும் படையினர், மாவட்ட மேலாளர் அலுவலக ஆய்வு குழுவினர் மற்றும் உதவி கமிஷனர் (கலால்) அலுவலக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த குழுக்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் ஆய்வு செய்யும்போது அங்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும்? என்பது குறித்து அறிவுரை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழிப்புணர்வு வாசகங்கள்

பெயர்ப்பலகையின் கீழே ‘மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்-மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள், கட்டணம் இல்லாத தொலைபேசி எண் ஆகியவை இருக்கவேண்டும். பிளாஸ்டிக் தடை குறிப்பிடும் பலகை குறிப்பிடப்பட வேண்டும்.

தீ அணைப்பான் கருவி இருக்கவேண்டும். கடை உரிமச்சான்றிதழ் இருக்கவேண்டும். மதுபான கடைகள் மற்றும் பார்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவேண்டும். இரும்பு ‘கேட்’ அமைக்கப்பட்டு, அதனை உட்புறமாக பூட்டியிருக்கவேண்டும். பார்களில் உரிமம் (லைசென்சு) வைத்திருக்கவேண்டும்.

பார்களில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள் மற்றும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

கூடுதல் கட்டணம்

ஆய்வு மற்றும் தணிக்கை அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையை உடன் வைத்திருக்கவேண்டும். கடை ஊழியர்கள் கேட்கும் பட்சத்தில் அதை காண்பிக்கவேண்டும்.

மதுபான கடைகளில் உள்ள 3 பிரதிகள் கொண்ட ஆய்வு பதிவேட்டில், ஆய்வு மேற்கொள்ளும் குழுக்கள் தவறாமல் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு மற்றும் தணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து, கடை ஊழியரிடம் கையொப்பம் பெறவேண்டும்.

மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டறியும்போது எவ்வளவு தொகை மீறப்பட்டது என்பதையும், பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

பதிவு செய்ய வேண்டும்

மேலும் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் இருந்து கையொப்பமும் பெறவேண்டும். இதனை கடையில் வைத்திருக்கும் ஆய்வு பதிவேட்டில் தணிக்கை செய்யும் குழுவினரால் பதிவு செய்யவேண்டும்.

மாவட்ட மேலாளர்களை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வாரம் ஒரு முறை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும். ஆய்வில் விற்பனை குறைவான கடைகள், அதிகம் விற்பனையாகும் கடைகள் மற்றும் பார் வசதி இல்லாத கடைகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story