சாலைகள் மூடல்: போக்குவரத்து முடங்கியது வாகன ஓட்டிகள் கடும் அவதி


சாலைகள் மூடல்: போக்குவரத்து முடங்கியது வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 12 Oct 2019 10:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:15 PM GMT)

சீன அதிபர் வருகையால் சாலைகள் மூடப்பட்டதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங்கின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்து முடிந்து இருக்கிறது. இதற்காக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சீன அதிபர் ஜின்பிங் பயண திட்டம் சாலைமார்க்கமாக அமைக்கப்பட்டிருந்ததால், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரையில் பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவர் காரில் பயணம் செய்த கிண்டி, மத்திய கைலாஸ், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பனையூர், கோவளம் உள்பட கிழக்கு கடற்கரை முழுவதும் மூடப்பட்டன. அப்பகுதிகளில் உள்ள உட்புற சாலைகளையும் போலீசார் தடுப்பு அமைத்து மூடினர்.

பயண நேரம் மாறியதால்...

சீன அதிபர் ஜின்பிங் 11-ந்தேதி மாமல்லபுரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு சென்னை திரும்புவதாக பயண திட்டம் இருந்தது. ஆனால் அவர் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை திரும்பினார். அதே போன்று நேற்று காலை 9 மணிக்கு அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டார்.

சீன அதிபர் பயணம் செய்த சாலைகளில், அவரது கார் வருவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே மற்ற வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் சீன அதிபரின் பயண திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்க செய்தது.

வாக்குவாதம்

கடந்த 10-ந்தேதி பாதுகாப்பு ஒத்திகை, 11-ந்தேதி சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திர மோடி முதல் நாள் சந்திப்பு, 12-ந்தேதி 2-வது நாள் சந்திப்பு என்று 3 நாட்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சென்னை மக்கள் சந்தித்துள்ளனர்.

குறிப்பாக கிண்டி, அடையார், திருவான்மியூர், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட சாலைகள் போக்குவரத்து நெரிசலால் முடங்கிப் போனது. மூடிய சாலையை போலீசார் எப்போது திறப்பார்கள்? என்று காத்திருந்து வாகன ஓட்டிகள் சோர்வடைந்து போனார்கள்.

எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி போலீசார் சாலையை திறக்கவில்லை. சீன அதிபர் வாகனம் சென்ற பின்னரும் சாலையை திறக்காததால் வாகன ஓட்டிகள் நொந்து போயினர். விரக்தியடைந்த சில வாகன ஓட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்களில் கூட்டம்

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன் கூட்டியே கருதிய பலர் ரெயில் பயணத்தை மேற்கொண்டனர். இதனால் ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

சென்னை உள்பட 12 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க நீண்ட நேரம் நின்றனர்.

போலீசார் வேண்டுகோள்

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பையொட்டி ஏற்கனவே போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதில், இரு தலைவர்கள் பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story