திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்


திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 14 Oct 2019 9:32 AM GMT (Updated: 14 Oct 2019 10:02 AM GMT)

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சி

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 28 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்புறமுள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (வயது 45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28), மணிகண்டன் உள்பட 8 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

முருகனையும், சுரேஷையும் தேடி வந்த நிலையில், சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை கோர்ட்டு உத்தரவு பெற்று திருச்சி சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டான். இதற்கிடையே சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

அப்போது, தன்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினால் போலீசார் அடித்து காலை உடைத்து விடுவார்கள் என தனக்கு பயமாக இருப்பதாக நீதிபதியிடம் சுரேஷ் கதறியுள்ளான்.

தொடர்ந்து விசாரணை செய்த நீதிமன்றம், சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.  போலீஸார் துன்புறுத்தக் கூடாது, 2 நாட்களுக்கு ஒரு முறை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சுரேஷை அழைத்துச்சென்ற போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story