புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும்போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை : தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும்போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை : தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 10:07 PM GMT)

தமிழக அரசு புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும்போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் இதுவரை மருத்துவ கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப்படவுள்ள இந்த கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும்.

தமிழகத்தில் ஏற்கனவே 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 3250 இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசு கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும். இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும்.

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவ குழுவின் தொழில்நுட்ப குழு அனுமதி அளித்துள்ள நிலையில், பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அமைக்கவுள்ள 6 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட வட மாவட்டங்களில் இல்லாத நிலையில், தமிழக அரசு புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும்போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, நரேந்திர மோடி அரசு முதன் முறையாக பதவியேற்ற பின்னர் 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அதற்கு முன்பாக அக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story