மாநில செய்திகள்

‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Edappadi Palanisamy regime will fall MK Stalin speech

‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு

‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு
இன்னும் 1½ மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம்,

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அசோகபுரி, ஈச்சங்குப்பம் கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால்தான் கிராமப்புறங்களில் எந்தவொரு அடிப்படை வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு நாங்கள் தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி, அப்பட்டமான பொய் சொல்லி வருகிறார். முதல்-அமைச்சருக்கு இது அழகல்ல. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.


ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற கட்சி தி.மு.க. மட்டும்தான். நியாயமாக ஆட்சியில், பதவியில் உள்ளவர்கள் தான் மக்களை தேடி வர வேண்டும். ஆனால் அவர்கள் வருவதும் கிடையாது, மக்களுக்காக எதையும் செய்வதும் கிடையாது. ஜெயலலிதா செய்த புண்ணியத்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டனர்.

ஒரு மெஜாரிட்டி ஆட்சிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போது கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி சுப்ரீம் கோர்ட்டில் ஊசலாடுகிறது. இன்னும் 1½ மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடலாம். தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும்.

அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் விலகுகிறாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் புறக்கணித்து தோற்கடிக்க போகிறார்கள். அவர்களின் ஒரே எண்ணம் எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டுமே தவிர மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ கவலைப்படுவதில்லை.

இன்றைக்கு படித்த பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினோம், வெளிநாடு சென்றோம், லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளோம் என்று தவறான தகவலை கூறி வருகின்றனர். ஆளும்கட்சி அமைச்சர்கள் கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைப்பதற்காகத்தான் வெளிநாடு சென்றனர். நமது ஆட்சி வந்ததும் அதற்கு சரியான விடை காணப்படும்.

தலைவர் கருணாநிதி, மிகப்பெரிய தொழில்புரட்சியை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே தமிழகத்தில் அதுவும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். ஸ்ரீபெரும்புதூரிலும் தொழிற்சாலை ஏற்படுத்தி கொடுத்து லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். ஆனால் இன்றைக்கு தொழில் தொடங்க வருபவர்களிடம் கமிஷன் கேட்பதால் அவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

தமிழகத்தில் ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது எடப்பாடி ஆட்சி அல்ல, எடுபிடி ஆட்சி, மத்திய ஆட்சிக்கு எடுபிடியாக இருந்து அவர்கள் என்ன சொன்னாலும் அதை செய்கிறார்கள். நல்லது சொன்னால் பரவாயில்லை, கெட்டதைத்தான் செய்கிறார்கள். இந்தியில் படிக்க வேண்டும், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று திணிக்கிறார்கள். இதை இங்குள்ள ஆட்சியாளர்கள் எதிர்த்து கேட்பதில்லை. இதே நிலைமை நீடித்தால் தாய்மொழியான தமிழ் மொழிக்கு ஆபத்து வந்துவிடும்.

தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விக்கிரவாண்டியில் தொழிற்பேட்டை தொடங்குவதாக அறிவித்தார். நாம் ஆட்சியில் இருந்திருந்தால் அது வந்திருக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது நடக்கவில்லை. தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் நோக்கத்துடன் இந்த ஆட்சியில் வேண்டுமென்றே அதை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

எனவே ஊழல் நிறைந்த, கொள்ளை ஆட்சிக்கு முடிவுக்கட்ட நல்ல முன்னோட்டம்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலோடு அ.தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.