திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் 12 மணிநேரத்திற்கு மேல் தீவிரம்


திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் 12 மணிநேரத்திற்கு மேல் தீவிரம்
x
தினத்தந்தி 26 Oct 2019 1:15 AM GMT (Updated: 2019-10-26T10:39:43+05:30)

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன.

திருச்சி,

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி அருகே பெற்றோருடன் வசித்து வந்த குழந்தை சுர்ஜித் வில்சன் (வயது 2).  குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது.

இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்துள்ளான்.  குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன.

தோண்டப்பட்ட போர்வெல் 5 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.  போர்வெல் மூடப்பட்ட நிலையிலும் மழை பெய்ததால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

மதுரையில் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து டேனியல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குழந்தை 68 அடி ஆழத்திற்கு சென்று விட்டது என கூறப்படுகிறது.  இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர் பதைபதைப்புடன் உள்ளனர்.  காலை 8 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு செல்ல இருக்கின்றனர்.  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமுடன் நடந்து வருகின்றன.

Next Story