ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு சம்பவம்: காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா-பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவர்


ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு சம்பவம்: காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா-பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவர்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:13 PM GMT (Updated: 30 Oct 2019 11:13 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா- பேத்தியை டெம்போ டிரைவர் காப்பாற்றினார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர். இவர், நேற்று மதியம் தன்னுடைய 2 வயது பேத்தி பிரதிப்ஷாவுடன் ஆரல்வாய்மொழி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். பிரதிப்ஷா காரின் முன் இருக்கையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

செண்பகராமன்புதூர் அருகே சென்றபோது பாக்கியராஜின் மீது பிரதிப்ஷா விழுந்தார். இதனால் பாக்கியராஜ் நிலை தடுமாறினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த குளத்துக்குள் பாய்ந்தது.

தாத்தா-பேத்தியை காப்பாற்றினார்

அப்போது, அந்த வழியாக டெம்போ ஓட்டி வந்த ஒருவர், குளத்துக்குள் கார் ஒன்று பாய்ந்ததை கண்டு திடுக்கிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் குளத்து தண்ணீரில் கார் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க தொடங்கியது. காருக்குள் இருந்த பாக்கியராஜ், தன்னுடைய பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு அபய குரல் எழுப்பினார். டெம்போ ஓட்டி வந்தவர், அவர்களை காப்பாற்ற மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

குளத்துக்குள் குதித்து காருக்குள் சிக்கி இருந்த பாக்கியராஜ் கையில் இருந்த குழந்தையை முதலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் பாக்கியராஜை, காரின் கதவு வழியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அவர்கள் கரை வந்து சேருவதற்குள் கார், குளத்துக்குள் மூழ்கி விட்டது. அதிர்ஷ்டவசமாக தாத்தாவும், பேத்தியும் உயிர்தப்பினார்கள்.

கார் மீட்பு

தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே குளத்து தண்ணீரில் மூழ்கிய காரை அப்பகுதி இளைஞர்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் குளத்துக்குள் மூழ்கிய காரை மீட்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் கார் கண்டுபிடிக்கப்பட்டு மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில் பாக்கியராஜின் செல்போன் மற்றும் பிரதிப்ஷா அணிந்திருந்த 2 பவுன் நகை ஆகியவை தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.

போலீசார் பாராட்டு

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குளத்துக்குள் குதித்து 2 பேரை காப்பாற்றியது டெம்போ டிரைவர் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆவார். இவர், செண்பகராமன்புதூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆவார். அவரது இந்த துணிச்சலான செயலை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Next Story