சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பயங்கர தீ ரூ.3 கோடி பொருட்கள் சேதம்


சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பயங்கர தீ ரூ.3 கோடி பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:17 PM GMT (Updated: 30 Oct 2019 11:17 PM GMT)

கோவில்பட்டியில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ‘தி சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையானது 3 மாடிகளுடன் தரைத்தளம் மற்றும் அதன் அடியில் ஒரு தளம் என்று 5 தளங்களாக செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று முன்தினம் இரவில் வியாபாரம் முடிந்ததும், வழக்கம்போல் ஜவுளிக்கடையை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஜவுளிக்கடையின் அடித்தளத்தில் உள்ள ரெடிமேடு பிரிவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனைப் பார்த்த ஜவுளிக்கடையின் காவலர்கள், உரிமையாளர்களுக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விரைந்தனர்

உடனே தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், ஜவுளிக்கடையின் அனைத்து ஜன்னல்கள், கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததால், தீ மளமளவென்று அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது. இதனால் சிறிதுநேரத்தில் ஜவுளிக்கடை முழுவதும் தீ பரவி எரிந்தது.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை முடுக்கி விட்டனர்.

ஷட்டர் இடித்து அகற்றம்

தொடர்ந்து தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜவுளிக்கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அதன் நுழைவுவாயிலை திறக்க முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஜவுளிக்கடையின் பிரதான ஷட்டரை இடித்து அகற்றினர். தொடர்ந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க போராடினார்கள். அப்பகுதியில் கடும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி, மதியம் 12 மணி அளவில் தீயை அணைத்தனர்.

ரூ.3 கோடி சேதம்

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள், கட்டிடம் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்தில் சேதம் அடைந்த ஜவுளிக்கடையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். கோவில்பட்டி போலீசார் இந்த தீ விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story