6-வது நாளாக போராட்டம் நீடிப்பு: ‘எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார்’ டாக்டர்கள் சங்கம் திட்டவட்டம்


6-வது நாளாக போராட்டம் நீடிப்பு: ‘எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார்’ டாக்டர்கள் சங்கம் திட்டவட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:35 PM GMT (Updated: 30 Oct 2019 11:35 PM GMT)

டாக்டர்கள் போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. தங்கள் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து டாக்டர்கள் போராட்டமும் நடத்துகின்றனர். அதில் 5 டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 4 பேருக்கு ஏற்கனவே உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக பெருமாள்பிள்ளை என்ற டாக்டரும் உடல்நல குறைவால் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது பாண்டிதுரை, ஜெசிமா, நளினி ஆகிய மேலும் 3 டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக கொட்டு மழையிலும் இந்த போராட்டம் நீடித்தது.

அழைத்து பேசாதது ஏன்?

அரசு தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக டாக்டர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த பேச்சுவார்த்தைக்கும் அவர்களை அழைக்கவில்லை.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. ஆனால் அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.

போராட்டம் நடத்தாத சங்கத்தை அழைத்து பேசும் அரசு, போராட்ட களத்தில் இருக்கும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அழைத்து பேசாதது ஏன்? என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பி இருக்கின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

இதுகுறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுகாதாரத்துறையில் மூளை, சதை, நரம்பாக இருக்கும் டாக்டர்களை வஞ்சித்துவிட்டு, சுகாதாரத்துறையை முன்னெடுத்து செல்வது இயலாத காரியம். சுகாதாரத்துறை அமைச்சர் எங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார். ஆனால் நிறைவேற்றாத காரணத்தால்தான் நாங்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தோம்.

ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது நியாயமாக தெரிந்த கோரிக்கைகள், இப்போது சரியில்லை என்றும், எங்களுடைய அமைப்பை அன்றைய பேச்சுவார்த்தையின் போது அங்கீகரித்த அமைப்பாக ஏற்றுவிட்டு, இன்று அங்கீகாரமற்ற அமைப்பு என்றும் அமைச்சர் சொல்கிறார். எங்கள் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. சுகாதாரத்துறை ஏற்கனவே முழுமையாக ஒப்புக்கொண்டது. எனவே எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

சட்டரீதியாக சந்திப்போம்

90 சதவீதம் டாக்டர்கள் பணியில் இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறு. நாங்கள் அவசர சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு சிலரை பணிக்கு அனுப்பி இருக்கிறோம். அடக்குமுறைகளை ஏவிவிட்டு எங்களுக்கு மேலும் காயத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். நாங்கள் அரசியல் கட்சி நடத்தவில்லை. மிகுந்த வேதனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம்.

முதல்-அமைச்சர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் எங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக கூறுகிறார்கள். இதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். அதை சட்டரீதியாக சந்திப்போம். எங்கள் பணியிடங்களை காலியிடமாக அறிவிப்போம் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், நாங்களே ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம்.

எதிர்கொள்ள தயார்

இத்தனை நாட்களாக நாங்கள் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகளை இப்போது நியாயமில்லை, எந்த அடிப்படையும் இல்லை என்று கூறும் அமைச்சர், இதே கோரிக்கையை வேறு சங்கம் முன்னெடுத்து வரும்போது பரிசீலிப்பதாக சொல்வது என்ன நியாயம்?

எனவே எங்கள் மீது அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கவுரவம் பார்க்காமல் அரசு உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story