மாநில செய்திகள்

பசும்பொன்னில் குருபூஜை விழா:முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை + "||" + Guru Pooja Festival at Pasumpon

பசும்பொன்னில் குருபூஜை விழா:முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

பசும்பொன்னில் குருபூஜை விழா:முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதிகாலை முதலே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

காலை 9.20 மணிக்கு பசும்பொன் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு 9.35 மணி அளவில் தேவர் நினைவிடத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பேரவை இளைஞர்கள் மதுரையில் இருந்து கொண்டுவந்த அணையா ஜோதியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்று தேவர் நினைவிடத்தில் ஒப்படைத்தனர்.

பேட்டி

அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1979-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தேவருக்கு அரசு விழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து இன்று வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்தியது அ.தி.மு.க. அரசு. 2014-ம் ஆண்டு தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பசும்பொன்னில் அவரது சிலைக்கு, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கினார். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து முத்துராமலிங்க தேவருக்கு புகழ் சேர்த்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ

பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருநாவுக்கரசர் எம்.பி., அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நடிகர் கார்த்திக், கருணாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.