மாநில செய்திகள்

கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல்தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன + "||" + intensity of the monsoon in Tamil Nadu

கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல்தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன

கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல்தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல் உருவாகி இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

திருத்தணியில் 19 செ.மீ. மழை

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தென் மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பெய்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கும், ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

‘மஹா’ புயல்

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை திருவனந்தபுரத்துக்கு தென்மேற்கில் சுமார் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மஹா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ஓமன் நாடு சூட்டிய பெயர் ஆகும்.

இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு பகுதியை கடந்து செல்லும்.

மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கனமழை பெய்யும்

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 80 இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில்(இன்று) தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுகோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களை பொறுத்தவரையில் 31-ந் தேதி (இன்று) மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக் கடல், தெற்கு கேரளா கடற்பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு (இன்று) மழை தொடரும்.

கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று (அதாவது நேற்று) வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 செ.மீ. மழை பெய்து உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 17 செ.மீ. ஆகும். அதாவது இயல்பான அளவை விட 14 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழை நேற்றும் நீடித்தது. நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், கூடங்குளம், செங்கோட்டை, தென்காசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. மழையின் காரணமாக குளங்கள் வேகமாக நிரப்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தருவைகுளத்தில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அவர்களுடைய குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பூதப்பாண்டி பகுதியில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன. கன்னியாகுமரியில் 2 வீடுகள் இடிந்தன. கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. நேற்று காலையிலும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

நெல்லிக்குப்பம் பகுதியில் பெய்த மழை காரணமாக கம்பன் நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்து பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடலூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வெள்ளாறு ஆற்றின் குறுக்கே மண்ணால் அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், பூதலூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், குடவாசல், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொடைக்கானலில் மரங்கள் சாய்ந்தன

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், அதில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். பில்லர் ராக், மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை ஓய்ந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

வடகிழக்கு பருவமழை காரணமாகவும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும் நீர்வரத்து அதிகரித்து கடந்த 23-ந் தேதி இந்த ஆண்டில் மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மழையால் குடிசை வீடுகள் இடிந்தன. ஆரணியில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

கோவையை யொட்டிய மேற்று தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேரூர் தரைப்பாலம் மூழ்கியது. குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை குற்றால அருவில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராட்சத பாறைகள் உருண்டன

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று பெய்த மழையால் மேரீஸ்ஹில் பகுதியில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. ஓல்டு ஊட்டி பகுதியில் நடைபாதை உடைந்து, அந்தரத்தில் தொங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

ஊட்டி ரோகிணி சந்திப்பு பகுதியில் நேற்று மாலை 3 வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் காயம் அடைந்தார். குன்னூர்-சேலாஸ் சாலையில் சின்ன கரும்பாலம் என்ற இடத்தில் 2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்களும் வராததால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

மலைரெயில் ரத்து

ஊட்டி மலைரெயில் பாதையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.மதியம் 2 மணிக்கு ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மலை ரெயிலில் பயணிப்பதற்காக முன்கூட்டியே டிக்கெட் எடுத்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மழை அளவு

தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர்(செ.மீ.) மழை அளவு பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 15 செ.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, வேலூர் மாவட்டம் சோளிங்கர், கடலூர் மாவட்டம் கீழச்செருவை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 14 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் 12 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 11 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 1 செ.மீ. முதல் 9 செ.மீ. வரை மழை பெய்து உள்ளது.