மாநில செய்திகள்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: சென்னையில் நடந்த விழாவில் - மத்திய மந்திரி முரளிதரன் உறுதி + "||" + The problem of Tamil Nadu fishermen At a ceremony in Chennai Union Minister Muralitharan confirmed

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: சென்னையில் நடந்த விழாவில் - மத்திய மந்திரி முரளிதரன் உறுதி

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: சென்னையில் நடந்த விழாவில் - மத்திய மந்திரி முரளிதரன் உறுதி
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று சென்னையில் நடந்த விழாவில் மத்திய மந்திரி முரளிதரன் கூறினார்.
சென்னை,

மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி வி.முரளிதரனுக்கு, ‘புதிய இந்தியா’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று பாராட்டு விழா நடந்தது.


பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நடிகர் சுரேஷ் மேனன், நாயர் சேவா சமாஜத்தின் தலைவர் ஜெய்சங்கர் உன்னிநாதன், இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெய்சங்கர் மேனன், பிரபல நடன கலைஞர் கோபிகா வெர்மா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் மத்திய மந்திரி வி.முரளிதரன் பேசும்போது கூறியதாவது:-

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களின் நலன்கள் மற்றும் தேவைகளை கண்டறிய அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளோம்.

பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்ய முடியுமோ அதை மத்திய அரசு நிச்சயமாக செய்யும். தமிழகத்தை பொறுத்தமட்டில் இதன்மூலம் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஆலோசனை கூட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து விரைவில் நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

உலக பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியா பாதித்துள்ளது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல பிரச்சினைகள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு மீண்டு வருவோம். சீன அதிபர்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் அரசியலமைப்பு சட்டம் சமமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில கட்சிகள் சமூக நீதிக்காக போராடுவதாக கூறி வருகிறார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் சமூக நீதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கிறார்கள். என்ன நியாயம்? என்று தெரியவில்லை.

இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தி மொழி கற்று கொடுக்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முரண்பாடாகவே உள்ளது. தமிழகத்தில் பல தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன். இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் இதுபற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

இதன்மூலம் அவர்கள் தமிழையும் காக்கவில்லை என்பது தான் தெரிகிறது. நமது நாட்டு மொழியான இந்தி வேண்டாம் என கூறும் அவர்கள், அன்னிய மொழியான ஆங்கிலம் மட்டும் தேவை என கூறுகிறார்கள். இதில் என்ன நியாயம் உள்ளது?. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய மந்திரி முரளிதரனுக்கு விழாக்குழுவினர் சார்பில் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகி வக்கீல் ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.