கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட விஜய் நீதிமன்றத்தில் சரண்


கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட விஜய் நீதிமன்றத்தில் சரண்
x
தினத்தந்தி 6 Nov 2019 5:56 AM GMT (Updated: 6 Nov 2019 5:56 AM GMT)

சென்னையை அடுத்த வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர் விஜய் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வேங்கடமங்கலம் பார்கவி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன்களான விஜய், உதயா, ஆகியோர் முகேசின் நண்பர்கள்.

நேற்று மதியம் மாணவர் முகேஷ் தனது நண்பரான விஜயை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டின் வெளியே இருந்த உதயாவிடம் விஜய் எங்கே என கேட்க, விஜய் வீட்டின் உள்ளே அவரது அறையில் உள்ளார் என உதயா கூறியுள்ளார்.

விஜய் இருந்த அறைக்கு முகேஷ் சென்றார். அப்போது இருவரும் இருந்த அறையில் இருந்து திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. இதைகேட்ட வெளியில் இருந்த விஜயின் தம்பி உதயா அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரது நெற்றியில் குண்டு துளைத்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. இதை பார்த்த விஜய் ‘தெரியாமல் சுட்டுவிட்டேன்’ என்று கூறிவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

செய்வதறியாது திகைத்த உதயா சத்தம் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் முகேசை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கி சூட்டில் மாணவன் முகேஷ் உயிரிழந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் இன்று சரணடைந்தார். 

Next Story