‘கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


‘கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2019 11:04 PM GMT (Updated: 6 Nov 2019 11:04 PM GMT)

கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளுவரை பொறுத்தவரை சாதி, மதம், இனம், மொழிகளை கடந்து, உலக பொதுமறை தந்த மனித குலத்துக்கு அப்பாற்பட்ட தெய்வப்புலவர் என போற்றப்படுபவர். கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவரை திருவள்ளுவருடன் ஒப்பிடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியாது. திருவள்ளுவர் புகைப்படத்தில் கமல்ஹாசன் தலையை ஒட்ட வைத்தால், அவர் திருவள்ளுவர் ஆகி விட முடியுமா?. இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த கூடாது. திருவள்ளுவர் மேல் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, மதத்தையோ திணிக்கக்கூடாது.

அனைவருக்கும் பொதுவானவர் திருவள்ளுவர். திருக்குறளை அனைத்து நாட்டினரும் மொழிபெயர்த்து, அதன் கருத்துக்களை தங்களது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தாலே, உலகில் போர் என்பதே இருக்காது. தற்போது திருவள்ளுவரை அரசியலாக்கி வருகின்றனர். இது வேதனைக்குரியது. திருக்குறளை படித்தவர்கள் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க மாட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதா, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்தார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விதை போட்டது அ.தி.மு.க. தான். தோல்வி பயத்தாலேயே கோர்ட்டில் வழக்கு தொடுத்து தேர்தல் நடத்த தி.மு.க. தடை வாங்கியது.

தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது. விரைவில் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ‘கியார்’ புயலின்போது சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் 741 படகுகளில் இருந்த 7,888 மீனவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

நாக்பூரில் வெங்காய விளைச்சல் குறைவாக இருப்பதால் வியாபாரிகள் விலை ஏற்றத்துக்காக பதுக்கிவைத்து வருவதாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களை பதுக்குவது தவறு. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நியாயமான விலையில் வெங்காயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story