ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் மனைவியுடன் கைது


ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் மனைவியுடன் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 11:15 PM GMT (Updated: 7 Nov 2019 10:00 PM GMT)

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி செய்த புகாரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தரமணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜான் பீட்டர் (வயது 53). இவரது மனைவி ஜெஸ்பின் ராணி (50). இவர்கள் சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியில் வசிக்கிறார்கள்.

அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஏலச்சீட்டு மூலம் பணவசூலில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் தனது பதவியை பயன்படுத்தி ஏராளமானவர்களிடம் ஏலச்சீட்டு மூலம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. ரூ.51 லட்சம் வரை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக, ஜான் பீட்டர் மீதும், அவரது மனைவி மீதும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்ட 11 பேர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜான் பீட்டரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது மனைவி ஜெஸ்பின் ராணியையும் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர், தான் பணமோசடியில் ஈடுபடவில்லை என்றும், ஏலச்சீட்டை தனது மனைவி தான் நடத்தினார் என்றும், ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஜெஸ்பின் ராணி அந்த பகுதியில் பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து பிரபலமாக வலம் வந்துள்ளார்.

அவர் அந்த பகுதியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story