ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 13 Nov 2019 6:35 AM GMT (Updated: 13 Nov 2019 6:35 AM GMT)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி சமீபத்தில் மேற்கொண்ட தாய்லாந்து சுற்றுப்பயணத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.  இதனால் உலக அரங்கில் திருக்குறளின் மேன்மை கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது.  இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  பின்பு சிலை சுத்தம் செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க. தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தமிழக தலைவர் நிர்மல் குமார், தமிழக பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு தி.மு.க. பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும், திருக்குறளையும், தமிழ் மொழியையும் தி.மு.க.வினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர் எனவும் நிர்மல் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலக அரங்கில் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்து சென்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

திருக்குறளை மக்கள் மத்தியில் எளிமையாக கொண்டு சேர்க்க பா.ஜ.க. பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.  அதன்படி ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்வதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மிக விரைவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி பேசி அவருடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Next Story