தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Nov 2019 12:00 AM GMT (Updated: 16 Nov 2019 10:09 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த கேரள மாணவி பாத்திமா கடந்த 8-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் முக்கிய காரணம் என்று அவருடைய தந்தை அப்துல் லத்தீப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பாத்திமா தற்கொலை வழக்கு விஸ்வரூபம் எடுத்ததால், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஐ.ஐ.டி.யில் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு கோட்டூர்புரம் போலீசார் வசமிருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைக்கு மாறியது.

இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன பத்மநாபன், பாத்திமாவின் நண்பர்கள் உள்பட பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள கேரள சமாஜத்தில் தங்கி இருக்கிறார். அவரிடம் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரையில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக அப்துல் லத்தீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய மகள் பாத்திமா நன்றாக படிக்க கூடியவர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தும் கூட, தமிழகத்தில் தான் படிப்பேன் என்று கூறினார். எனக்கும் சென்னை பிடித்த ஊர் என்பதால், அனுப்பி வைத்தேன்.

ஐ.ஐ.டி.யில் நடந்த அனைத்து செமினார் தேர்வுகளிலும் அவள் தான் முதலிடம் பெற்றார். எனவே மதிப்பெண் விவகாரத்தில் என்னுடைய மகள் தற்கொலை முடிவை எடுக்கவில்லை என்று ஆதாரங்கள், ஆவணங்களையும் அளித்துள்ளேன். எனது மகள் பாத்திமா பயன்படுத்திய கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அளிக்கும்படி அதிகாரிகள் கேட்டனர்.

தேவைப்பட்டால் எனது 2-வது மகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் பாத்திமா தங்களுடைய சொந்த பிள்ளை போன்று கருதி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அப்துல் லத்தீப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடர்பாக கேரள டி.ஜி.பி. தன்னிடம் பேசியதாக கமிஷனர் என்னிடம் தெரிவித்தார். 2 நாட்களில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் என்னிடம் கூறினார்’ என்று தெரிவித்தார்.

Next Story