பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு தமிழக அரசு அறிவிப்பு


பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2019 5:45 AM IST (Updated: 20 Nov 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சொத்து வரி

சென்னை மாநகராட்சியில் 1998-ம் ஆண்டுக்கு பின்னரும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-ம் ஆண்டுக்கு பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை.

சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசால் 2018-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதியன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

வரி உயர்வு

அதன் அடிப்படையில், வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், பிறவகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்து வரி உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.

பின்னர் 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதியன்று, வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்திற்குமே சொத்து வரி 50 சதவீதத்துக்கு மிகாமல் உயர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

இணைப்பு பகுதிகள்

அதன் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

விரிவாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளில், ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் (கோர் ஏரியா) உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்வு செய்து சொத்து வரி விதிக்கப்பட்டது.

குறைக்க கோரிக்கை

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் தவிர அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்பு குறைவான அளவீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி மறு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து சொத்து வரி உயர்வை குறைக்கக்கோரி கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்பட்டு வந்தன.

குழு அமைப்பு

அதன் அடிப்படையில், நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கடந்த ஜூலை 8-ந் தேதியன்று அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட சொத்து வரி சீராய்வு குறித்த மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தேன். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், நான் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிப்பு செய்ததன்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய ஏதுவாக, தற்போது அரசு நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளரின் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குனர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய உறுப்பினர்கள் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி உயர்வு செய்யப்பட்ட சொத்து வரி, மிக அதிகமாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது ஆய்வு செய்து அரசுக்கு உடனடியாக அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.

பழைய வரியை செலுத்தினால் போதும்

அதுவரையில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில், சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வரை செலுத்தி வந்த சொத்து வரியை கட்டிட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும் என்று அரசு முடிவு செய்துள்ளது. வரி செலுத்துவோர் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, அவர்களின் சொத்து வரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story