சொத்துவரி உயர்வை உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்


சொத்துவரி உயர்வை உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:08 AM GMT (Updated: 20 Nov 2019 11:08 AM GMT)

சொத்துவரி உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைமையில் பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராடியபோதும் திரும்பப்பெறாத சொத்துவரி உயர்வை உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதும்  எதிர்க்கட்சியான திமுக ஆர்ப்பாட்டம் நடத்திய போதும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போதும் முடியவே முடியாது என்று அடம்பிடித்த அதிமுக அரசு சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகாராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் 50 முதல் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்துவரி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது.

தேர்தல் என்றதும் மக்களைப் பற்றிய நினைவு. தேர்தல் முடிந்ததும் மக்கள் முதுகில் வரி, கட்டண உயர்வு போன்ற சுமைகள் என்று செயல்படும் முதலமைச்சர் பழனிசாமியின் அரசு முதலில் பொய் சொல்வதும் பிறகு வாபஸ் பெறுவதுமாகவே தனது ஆட்சிக் காலத்தை கழித்து வருகிறது. 

சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 1.4.2018-லிருந்து அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி, சம்பந்தப்பட்ட சொத்துவரி செலுத்தியோரின் கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும் என்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அறிவித்திருக்கிறார். 

மக்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றன என்று பாவ்லா முகாம்கள் நடத்தும் அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிய சொத்து வரி விஷயத்தில் 16 மாதம் கழித்து அமைச்சரவையைக் கூட்டி தாமதமாக முடிவு எடுத்துள்ளதற்காக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி அடுத்த அரையாண்டில் ஈடுகட்டப்படும் என்று அமைச்சர் தன் அறிவிப்பில் சொன்னாலும், சொத்துவரி மறுபரிசீலனை கமிட்டி அமைப்பதற்கான 19.11.2019 தேதியிட்ட அரசாணையில் அதிகரிக்கப்பட்ட சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மட்டும்தான் இருக்கிறது.

ஏற்கனவே அதிகமாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி வரும் அரையாண்டுகளில் ஈடுகட்டப்படும் என்று எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஆகவே அரசாணையில் இல்லாததை உள்ளாட்சித் துறை அமைச்சர் இட்டுக்கட்டி அறிவித்துள்ளாரா? மக்கள் செலுத்திய வரி அவர்களின் கணக்கில் உண்மையிலேயே ஈடுகட்டப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. 

1.4.2018 அன்றிலிருந்து உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு இணையாக, குடிநீர்க் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அந்த கட்டணத்தை ஈடுகட்டுவது குறித்தும் எந்த வாசகமும் அரசாணையில் இல்லை. ஆகவே, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அதிகப்படியான சொத்துவரிக் கட்டணத்தையும், அதற்கு இணையாக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தையும் செலுத்தியவர்களுக்கே உடனடியாக காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருக்கிறது.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில், நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகள் அதற்கு முரணாக இருக்கின்றன.

நேற்றைய தினம் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் - அது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைத் தகர்க்கும் ஜனநாயக விரோத முடிவாகும்.

ஆகவே அமைச்சரவைக் கூட்டத்தில் மறைமுகத் தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story