சென்னையில் 24-ந்தேதி நடக்கிறது: ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களின் வெற்றி விழா நடிகர்-நடிகைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்குகிறார்


சென்னையில் 24-ந்தேதி நடக்கிறது: ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களின் வெற்றி விழா நடிகர்-நடிகைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்குகிறார்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 7:39 PM GMT)

ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களின் வெற்றி விழா சென்னையில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

சென்னை, 

ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களின் வெற்றி விழா சென்னையில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நடிகர்-நடிகைகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கே.கணேஷ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 2.0 படத்தில் செல்போன் கம்பெனி அதிபராக வந்தார். பின்னர் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக வேல்ஸ் பிலிம் இன்டர் நேஷனல் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எல்.கே.ஜி. படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். அரசியல் கதையம்சம் கொண்ட எல்.கே.ஜி.படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது.

அதன்பிறகு ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வசூல் குவித்து வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து வருண் கதாநாயகனாக நடித்த பப்பி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வெற்றி பெற்றது.

இந்த 3 படங்களின் வெற்றி விழாவையும், அவற்றில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் நடத்த உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாலை 6 மணிக்கு இந்த விழா நடக்க உள்ளது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய 3 படங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.

இதுகுறித்து ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘எங்களது வேல்ஸ் பிலிம் இன்டர் நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்.கே.ஜி, கோமாளி மற்றும் பப்பி ஆகிய மூன்று திரைப்படங்களும் மக்களின் பேராதரவு பெற்று வெற்றி படங்களாக அமைந்தன.

இதனை கொண்டாடும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து அவர்தம் பொற்கரங்களால் இம்மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story