வங்கி முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தம் சென்னையில் நிர்மலா சீதாராமன் பேச்சு


வங்கி முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தம் சென்னையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2019 10:45 PM GMT (Updated: 23 Nov 2019 9:24 PM GMT)

வங்கி முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

சென்னை,

தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில் ‘ஜி.ராமச்சந்திரன் (முன்னாள் நிதிச் செயலாளர்) 6-வது நினைவு சொற்பொழிவு’ சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் ஆர்.கணபதி வரவேற்புரையாற்றினார்.

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

பஞ்சாப் மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக தேவையான சட்ட திருத்தங்களை அரசு செய்யும். வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் ஒருபோதும் அச்சப்பட தேவையில்லை.

ஒவ்வொரு துறையிலும் உள்ள சவால்களை கண்டறிந்து, தீர்வு காணும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் வரை காத்திருக்காமல், பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. நீண்ட கால தீர்வு என்ற இலக்கை நோக்கி இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு எடுத்துச் செல்கிறது.

பி.எஸ்.-6 ரக வாகனங்கள் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பி.எஸ்.-4 ரக வாகனங்களை வாங்காமல் இருக்கிறார்கள். இதுதான் வாகன விற்பனை சரிவை சந்திப்பதற்கு முக்கியமான காரணம் ஆகும்.

இலக்கு

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பொருளாதார இலக்கை அடைவதற்கு அனைத்து துறைகளையும் துடிப்பானதாக வைத்துக்கொள்வதோடு, அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம், விளை பொருட்களின் மகசூலை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு, சுகாதார பாதுகாப்பு என்பது எங்களுடைய இலக்கு. அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய சேவை துறைகளிலும் அரசு கவனம் செலுத்திவருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் துணை தலைவர் அருண் அழகப்பன், பழனி ஜி.பெரியசாமி உள்பட தொழில் அதிபர்கள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Next Story