அரசு அதிகாரிகளுக்கு இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு அதிகாரிகளுக்கு இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Nov 2019 11:15 PM GMT (Updated: 23 Nov 2019 10:55 PM GMT)

அரசு அதிகாரிகளுக்கு இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “எங்கள் ஊரில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் ஆகிய 3 கோவில்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவில்களில் சுமார் 200 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. 2007-ம் ஆண்டு தேர் திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் தேர் பவனி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர் பவனி நடத்த போலீசார் அனுமதி தருவதில்லை. எனவே, தேர் பவனி நடத்த அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அடிப்படை உரிமை

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வருவாய் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகதீர்வு காண உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இறை வழிபாடு என்பது அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. இந்த வழிபாடுகளை தடுக்க அரசு அதிகாரிகளுக்கு உரிமை இல்லை.

கலெக்டருக்கு உத்தரவு

வழிபாடு நிகழ்வுகளின்போது பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மட்டுமே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளது. கட்டுப்பாடு என்று கூறி இறை வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை. எனவே, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஊர் மக்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகண்டு தேர் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story