மணல் கடத்தல் மூலம் கிடைக்கும் அபராத தொகையை செலவு செய்வதை கண்காணிக்க குழு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை


மணல் கடத்தல் மூலம் கிடைக்கும் அபராத தொகையை செலவு செய்வதை கண்காணிக்க குழு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 29 Nov 2019 11:00 PM GMT (Updated: 29 Nov 2019 9:24 PM GMT)

மணல் கடத்தல் மூலம் கிடைக்கும் அபராத தொகையை செலவு செய்வதை கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை, 

மணல் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள். அப்போது அவர்கள் எத்தனை யூனிட் மணல் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு யூனிட் மணலுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட கனிம வள அறக்கட்டளை என்ற பெயருக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், மணல் கடத்தல் தொடர்பான ஜாமீன் வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘ஐகோர்ட்டு விதித்த அபராத தொகை இதுவரை எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது? என்று மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் டி.சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, 30 மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பெறப்பட்ட அபராத தொகை வசூல் குறித்த விவர அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘இதுவரை 30 மாவட்டங்களில் ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டு விதித்த அபராத தொகையாக ரூ.19.73 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அதிகாரிகள் விதித்த அபராதம் உள்ளிட்டவைகள் மூலம் ரூ.564 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த தொகையை குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். அதனால், இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படுவதையும், அதை முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த செலவு செய்வதையும் கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இதுகுறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்காக வழக்கை பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story