பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம்: பயனாளிகளின் வயது வரம்பு உயருகிறது


பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம்: பயனாளிகளின் வயது வரம்பு உயருகிறது
x
தினத்தந்தி 6 Dec 2019 5:00 AM IST (Updated: 6 Dec 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பயனாளிகளின் வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி 40 வயதில் இருந்து 45 வயதாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பணியாற்றும் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். தற்போது இந்த திட்டத்தின் பயனாளிகளின் தகுதியில் தளர்வைக்கொண்டு வந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர்களின் கருத்துகளைக் கேட்டு அரசுக்கு கருத்துரு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டியில் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதை ஏற்று சில திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று முன்பிருந்த விதி தளர்த்தப்பட்டு, 45 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது. பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் பெண்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ்வரும் பெண்களின் (திட்ட பயனாளிகள்) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

இதே நிலைக்கு உள்படும், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களும் திட்ட பயனாளிகளாக முடியும் என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story