எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது


எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-11T03:35:56+05:30)

எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் பல்லாரி வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னை,

பல்லாரி வெங்காயம் விலை கடந்த 2 மாதங்களாக ஏதோ தங்கம் விலை உயர்வை போலவே பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

மராட்டியம்(நாசிக்), கர்நாடகா(பெல்லாரி), ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்லாரி(பெரிய) வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதில் நாசிக் வெங்காயம் தான் முதல் தரமானது என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்தது. அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.50 வரை தான் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், விலை உயர தொடங்கி, மொத்த மார்க்கெட்டில் ரூ.180 வரையிலும், சில்லரை கடைகளில் ரூ.200 வரையிலும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை ஆனது.

பல்லாரி வெங்காயம் தேவையை சமாளிக்க எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்தில் இருந்து மும்பைக்கு 40 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து திருச்சி, மதுரை மற்றும் சென்னைக்கு வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து திருச்சிக்கு 300 டன்னும், மதுரைக்கு 130 டன்னும், சென்னைக்கு 60 டன்னும் வெங்காயம் இதுவரை வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.

மொத்த மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தரமான (நாசிக்) பல்லாரி வெங்காயம், தற்போது ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கு அடுத்த தரமான கர்நாடகா வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130-க்கும், ஆந்திர வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், சிறிய அளவிலான பல்லாரி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும் கூட விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் கடந்த 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.40 வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் கூறியதாவது:-

எகிப்து வெங்காயம் வரத்தொடங்கிவிட்ட காரணத்தினாலும், இந்திய பல்லாரி வெங்காயம் வரத்து சற்று அதிகரித்து இருப்பதாலும் வெங்காயம் விலை குறைய தொடங்கி இருக்கிறது.

தற்போது நாளொன்றுக்கு நாசிக், பெல்லாரி, ஆந்திரா வெங்காயம் 40 லாரிகளில் விற்பனைக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் பல்லாரி வெங்காயம் ரூ.100-க்குள் வந்துவிடும். அடுத்த மாதம் (ஜனவரி) 2-வது வாரத்துக்கு பிறகு (பொங்கல் பண்டிகை முடிந்ததும்), பழைய விலைக்கு வெங்காயம் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

எகிப்து வெங்காயத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை

உலகிலேயே இந்தியா அதிக அளவு வெங்காய ஏற்றுமதியை செய்து வந்தது. அதில் எகிப்து இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. தற்போதைய தட்டுப்பாட்டை போக்க எகிப்தின் உதவியை இந்தியா நாடியது. அதன்படி அங்கிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்து வெங்காயம் நாசிக் வெங்காயம் போல் இருக்காது. அது கர்நாடகா, ஆந்திரா வெங்காயத்தை போன்றது. ஆனால் உருவத்தில் அனைத்து வெங்காயத்தையும் விட பெரியதாக இருக்கும். நாசிக் வெங்காயம் ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 காயும், கர்நாடகா மற்றும் ஆந்திரா வெங்காயம் ஒரு கிலோவுக்கு 15 காய் வரையிலும் எடை நிற்கும். ஆனால் எகிப்து வெங்காயம் ஒரு கிலோவுக்கு 5 முதல் 6 வெங்காயம் தான் வரும். ஒரு காய் மட்டும் குறைந்தபட்சமாக 150 கிராம் முதல் அதிகபட்சமாக 600 கிராம் வரையில் அளவில் உள்ளது.

எனவே இந்த வெங்காயத்துக்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இருந்தாலும் தற்போதைய விலை உயர்வை சமாளிக்க ஒரு மாற்று ஏற்பாடாக எகிப்து வெங்காயம் அமைந்துள்ளது. வீட்டுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த வெங்காயம் இல்லை என்றாலும் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளுக்கு இது தகுந்ததாக உள்ளது.

அதனால் எகிப்து வெங்காயத்தை பெரும்பாலும் ஓட்டல்கள், கடைகளுக்கு வாங்கி செல்கின்றனர் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய வெங்காயம் போல் எகிப்து வெங்காயம் சுவையும், காரமும் இல்லாத காரணத்தினாலும், அளவில் பெரியதாக இருப்பதாலும் மக்கள் அதை வாங்க தயங்குகின்றனர் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுவது இதுதான் முதல் முறை ஆகும். இதற்கு முன்பு வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story