மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலுக்கு தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு


மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலுக்கு தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 5:45 AM IST (Updated: 11 Dec 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக வாக்காளர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

சென்னை,

இந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை வாக்காளர்களே நேரடியாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மறைமுகமாக தேர்ந் தெடுக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் பிறப்பித்தது.

இதன் காரணமாக மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பதற்கு பதிலாக, கவுன் சிலர்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளுக்கும், 125 நகராட்சிகளுக்கும், 529 பேரூராட்சிகளுக் கும் இது பொருந்தும்.

இந்த அவசர சட்டத்துக்கு முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் களை மறைமுகமாக தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் மூலமாக மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு கடந்த நவம்பர் 19-ந் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது.

இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயக நடைமுறைகளுக்கும் விரோத மானது.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு, நேரடியாக வாக்காளர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடைபெற வேண்டும். அதைத்தான் அரசியலமைப்பு சட்டமும் வலியுறுத்துகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை மக்கள்தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும், நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை அமைப்புகளுக்கும் முடிச்சு போடக்கூடாது. எனவே பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஆளுங் கட்சி தங்களுக்கு சாதகமாக கொண்டுவந்துள்ள இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜ கோபால், அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரும், திருமாவளவன் எம்.பி. தரப்பில் வக்கீல் தீபிகா, பார்வேந்தன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டார்கள்.

திருமாவளவன் தரப்பில் வாதிடும்போது, “இந்த அவசர சட்டத்தால் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிட முடியாது. எனவே அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க மறுத்து விட்டனர்.

தீர்ப்பில், “ஒருவர் தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என கோருவது சட்டப்படியான உரிமை தானேயன்றி, அது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை கிடையாது. அதேபோல நேரடி தேர்தலை, மறைமுக தேர்தலாக மாற்றி இருப்பதை ஜனநாயக விரோதம் என்றும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என கூறி உள்ளனர்.

Next Story