மாநில செய்திகள்

ஆற்றுமணலுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்தி சென்னை மாநகராட்சி திட்டங்களில் ரூ.1,000 கோடி ஊழல் உரிய விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + Rs 1,000 crore corruption in Chennai corporation projects MK Stalin's urging to investigate

ஆற்றுமணலுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்தி சென்னை மாநகராட்சி திட்டங்களில் ரூ.1,000 கோடி ஊழல் உரிய விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆற்றுமணலுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்தி  சென்னை மாநகராட்சி திட்டங்களில் ரூ.1,000 கோடி ஊழல்  உரிய விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை மாநகராட்சி திட்டப்பணிகளில் எம் சாண்ட் பயன்படுத்தி ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும், இது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்

அ.தி.மு.க. அரசில், உள்ளாட்சித்துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம் சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

மழை நீர் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங் கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம் சாண்ட் என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆற்றுமணலை விட எம் சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம் 30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

கண்டனம்

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?.

அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்-அமைச்சரின் வலது கரமாகவும் இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே.

அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கைகட்டி நின்று கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.

விசாரணை நடத்த வேண்டும்

குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.

உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ஆற்றுமணலுக்குப் பதில் எம் சாண்ட் என்ற 1,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.