மாநில செய்திகள்

கலையரங்கம் புதுப்பித்தலில் முறைகேடு:‘கலாசேத்ரா’ முன்னாள் இயக்குனர் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு + "||" + Gallery Abuse in checkout

கலையரங்கம் புதுப்பித்தலில் முறைகேடு:‘கலாசேத்ரா’ முன்னாள் இயக்குனர் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

கலையரங்கம் புதுப்பித்தலில் முறைகேடு:‘கலாசேத்ரா’ முன்னாள் இயக்குனர் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
கலையரங்கம் புதுப்பித்தலில் முறைகேடு செய்ததாக சென்னை ‘கலாசேத்ரா’ முன்னாள் இயக்குனர் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை,

மத்திய அரசின் கலாசாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை திருவான்மியூரில் ‘கலாசேத்ரா’ நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம், நூலகம் செயல்படுகிறது. பரத நாட்டியம் உள்பட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது.

இதற்காக ‘கலாசேத்ரா’ வளாகத்தில் ‘கூத்தம்பலம்’ என்ற பெயரில் கடந்த 1985-ம் ஆண்டு கலையரங்கம் கட்டப்பட்டது. நாளடையில் இந்த கலையரங்கம் சிதிலமடைந்ததால், அதனை புதுப்பிக்கும் பணி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கியது. அந்த அரங்கம் ரூ.7.02 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.

இப்பணிக்கு ஒப்புதல் அளித்து கண்காணிக்கும் குழுவில், ‘கலாசேத்ரா’வின் அப்போதைய இயக்குனர் லீலா சாம்சன் தலைமையில் கணக்கு அதிகாரி (தலைமை) டி.எஸ்.மூர்த்தி, கணக்கு அலுவலர் எஸ்.ராமச்சந்திரன், என்ஜினீயர் வி.சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

உபகரணங்கள் தரமற்றவை

‘கூத்தம்பலம்’ கலையரங்கம் பொது நிதி விதிகளுக்கு முரணாகவும், ‘டெண்டர்’ முறையாக பின்பற்றாமல், வெளிப்படை தன்மையின்றி புதுப்பிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், அப்போதைய மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 62 லட்சத்து 20 ஆயிரத்து 354 ரூபாய் தேவையின்றி கூடுதலாக செலவானதும், கலையரங்கம் புதுப்பிக்க பயன்படுத்திய உபகரணங்கள் தரமற்றவை என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மத்திய கலாசார மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ‘கலாசேத்ரா’வின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன், அப்போதைய கணக்கு அதிகாரி(தலைமை) டி.எஸ்.மூர்த்தி, கணக்கு அலுவலர் எஸ்.ராமச்சந்திரன், என்ஜினீயர் வி.சீனிவாசன், கலையரங்கத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ரவி நீலகண்டன் ஆகியோர் மீது கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

சி.பி.ஐ. வழக்கு

இந்த புகார் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் 5 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு உள்பட பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சி.பி.ஐ. வழக்கில் சிக்கி உள்ள லீலா சாம்சன் பிரபல பரத நாட்டிய கலைஞர் ஆவார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர். சங்கீத நாடக அகாடமி தலைவராகவும், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.